Tuesday, October 6, 2009

நாட்டை முன்னேற்ற இதோ ஒரு வழி...

பழங்காலத்தில் நாணயங்கள் கிடையாது, ரூபாய் நோட்டுகள் கிடையாது, பண்டமாற்று முறைதான். நான் அரிசி கொடுக்கிறேன் நீ பட்டு கொடு என்பது போல். ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிக்கு அவரவர்கள் செய்யும் வேலைக்கு அறுவடை முடித்தபின் விவசாயிடம் இருந்து தானியம் கிடைக்கும். இது நான் சிறுவனாக இருக்கும்போது கூட பார்த்திருக்கிறேன். இப்போது இது சாத்தியப்படாது. அவசர யுகத்தில், அன்றைய வேலைக்கு அன்றே கூலி கொடுப்பதே நல்லது.

சரி, ரூபாய் நோட்டுகள் அரசாங்கத்திடம் இருந்து வெளிவந்தவுடன் அதன் இருப்பிடம் , போகும் வழிகள் கண்காணிக்கப்பட இயலாத ஒன்றாகிவிடுகிறது. நூறு ரூபாய் என கணக்கு காண்பித்து அறுபது ரூபாய் கொடுக்கும்போது 40 ரூபாய் கள்ளப்பணமாக மாறுகிறது. இதுபோலத்தான் கம்பெனிகளில் வேறு விதமாக கொள்ளை கொள்ளையாக கோடிக்கணக்கான ரூபாய்கள் கறுப்புப் பணமாக செல்வந்தர்களிடம் சேருகிறது. இதனை ஒழிக்க முடியாதா என இதுநாள்வரை கேள்வி கேட்காதவர் இல்லை.

இப்போதுள்ள நவீன யுகத்தில் இதனை முற்றிலுமாக தவிர்க்க இயலும், எப்படி ???

நாட்டில் உள்ள அனைவரது பணமும் அரசாங்கத்திடமே இருக்கும். நாம் ஒருவருக்கு அதனை கொடுத்து பொருள் வாங்கும்போது நம் கணக்கில் இருந்து பொருள் விற்பவர் கணக்கிற்கு பணம் மாற்றப்படும். இது அரசாங்கத்தின் கணிப்பொறியில் நடைபெறும். பொருள் பரிவர்த்தனை எப்போதும் போல இருவருக்குள் நடைபெறும்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கமே ஒரு தனித்துவமான எண்ணை அளிக்கும். அட , இதுதான் இப்போ வரப்போகுதே, ஆமாம் அதேதான். அத்துடன் வங்கிக்கணக்கு இல்லாத அனைவருக்கும் அரசு வங்கிகளில் ஒரு கணக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும், ATM கார்டு கொடுக்கப்படும். செல்போன் கார்டு படிப்பான் வசதியுடன் உருவாக்கப்படும்.அல்லது செல்போன் மூலம் பணபரிமாற்றம் செய்யும்படி வசதி செய்யப்படும்.  ஐம்பது ரூபாய்க்கு மேல் உள்ள ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும், அவை பின்னர் தடை செய்யப்படும்.

நடைமுறை இவ்வளவுதான்,
சிறு பொருட்கள்( நூறு ரூபாய்க்கு கீழ் ) வாங்க மட்டும்தான் பணம். மற்றவைகளுக்கு கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பண பரிமாற்ற ஆணையம் மூலம் பதிவு செய்யப்படும். முதலில் சிறிது சிரமமாகத்தான் இருக்கும், ஆனால் இதன் பலன்கள் அளவிட முடியாதவை.

  1. வரி என்ற ஒன்று நாம் கட்ட வேண்டியதில்லை, அதனை கணக்கிட்டு அரசாங்கமே பிடித்துக்கொள்ளும்.
  2. வருமான வரி, விற்பனை வரி, மற்றும் உள்ள அனைத்து வரிகளும் ஒளிவு மறைவின்றி நேராக அரசிடம் செல்லும். அதே போல, அரசாங்கம் வேலை கொடுக்கும் ஒப்பந்ததாரர்களும் செலவை மறைக்க முடியாது. ரியல் எஸ்டேட் அதிபர்கள், வணிகர்கள், என எங்கும் இனி கறுப்புப் பணம் இருக்காது.
  3. கள்ள நோட்டுகள் காணமல் போகும். நாட்டின் பாதுகாப்பு பலப்படும்.
  4. அனைவரின் பணமும் அரசாங்கத்திடம் இருப்பதால், திருடு போகாது.
  5. விவசாயிகளுக்கு மானியம் நேரடியாக கிடைக்கும். அதுபோல வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசு உதவிகள் நேரடியாக கிடைக்கும்.
  6. நாட்டின் உண்மையான உற்பத்தி என்னவென எளிதில் கண்டு கொள்ளலாம்.
வாசகர்களே உங்கள் கருத்து என்ன?

Monday, October 5, 2009

மக்கள் தொலைக்காட்சி ....

மக்கள் தொலைக்காட்சி விவசாயிகளுக்கு செய்துவரும் தொண்டுபற்றி நான் குறிப்பிடவில்லை என்றால் அது இந்த உழவன் குரலுக்கு சிறுமை.
இது தனியார் தொலைக்கட்சிகளில் தனித்து மட்டுமல்ல ,பொதிகையின் வயலும் வாழ்வை விட நன்றாக இருக்கிறது, மக்களின் மலரும் பூமி.நச் என்று படைப்புகள். எங்குதான் இவர்களுக்கு செய்திகள் கிடைக்குமோ , ஒவ்வொன்றும் புதுசு. விவசாய மக்களுக்கு தேவையானவை இவை அனைத்தும். இதனை சிடி யாக வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

இவர்களின் உழவர் சந்தை இன்னுமொரு அருமையான நிகழ்ச்சி. அதில் இன்னொரு தொகுப்பாளர் திரை மறைவில் இருந்து தொலைபேசி செய்பவர்களின் செய்திகளை தொகுத்து கூறி தொலைபேசி இணைப்பை மற்றம் செய்தால் அதிகம் பேர் பேசலாம். அதில் வரும் ஆசிரியர் ஒவ்வொன்றையும் அழகாக விவரிக்கும் விதம் மிக அருமை.

கொஞ்சம் கத்தரித்து விட்டு தினமும் இரவு மறு ஒளிபரப்பினால் நன்று.

வாழ்க மக்கள் தொலைகாட்சி, வளர்க அதன் புகழ்.
தொடர்க அதன் விவசாய நிகழ்ச்சிகள்.

அரசாங்கம் எனும் மாயை . . .

அரசாங்கம் மக்களிடம் ஓட்டு கேட்க வரும்போது மட்டும் பவ்யமாக, பிறகு நாம் ஒரு வேலைக்காக தேடிச்  சென்றால் ( காவல்,நீதி,அரசு சான்றிதல்,..) அதன் முகம் கோரமாக, நம்மை பஞ்சை பரதேசி கணக்காக பார்க்கிறது. இதனை முதலில் மாற்றவேண்டும்.

சீனாக்காரனை பார்த்து பயப்படுகிறோமே? ஏன் அவன் நாட்டில் செய்துள்ள அதிசியங்களை நாமும் செய்ய மறந்து விடுகிறோம்?அதை விடுங்கள்,
சென்னையில் கால்வாசி இருக்கும் சிங்கப்பூர் செய்துள்ள சாதனைகளும் , அதன் வருமானமும் கொஞ்சமா என்ன? சிங்கப்பூர் அரசாங்கம் (கம்பெனி அல்ல) நம் நாட்டில் முதலீடு செய்கிறது. ஏன் நம்மால் நம் நாட்டில் செய்ய முடியாது? பொதுத்துறை என்ற பெயரில் அரசு அதிகாரிகளும்,பொதுத்துறை அதிகாரிகளும் செய்யும் கூத்து, பாவம் அப்பாவி ஏழை மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது. யாருக்கும் சொந்தமில்லாத கம்பெனி்இல அடித்தது வரை லாபம் என பகல் கொள்ளைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சிங்கப்பூரில் நடப்பது நேர்மையான ஆட்சி, மீட்டர்க்கு மேலே ஓட்டுனர் காசு வாங்கிய குற்றத்தை நிருபிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணியை இலவசமாக வரவழைத்து சாட்சி சொல்ல வைத்து அதன் களங்கத்தை துடைத்த நாடு . நாம் பீரங்கி ஊழல் முதல், பல ஊழல்களை மென்று முழுங்கிஏப்பம் விட்டு அதிலே வளர்ந்து இப்போது வாக்காளர்களுக்கே வெளிப்படையாக லஞ்சம் கொடுக்கும் வரை வளர்ந்தாயிற்று.

 இங்கு ஒன்றுக்கும், பத்துக்கும் நாட்டின் வளங்களை(ரோடுகள், அலைக்கற்றைகள், கனிம வளங்கள்,...) அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்கும் அரசியல்வாதிகளின் ஆட்சி. அவர்களை ஆட்சியில் அமர்த்திய நம் ஆட்சி.

கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்தால் பிரேசில் போல நாமும் பெருமளவு அந்நிய செலாவணியை குறைக்கலாம், ஆனால் நேர்மாறாக கரும்பை விவசாயிகள் பயிரிட நினைக்க கூடாத அளவுக்கு அதன் விலையை குறைத்தது யார்?(எத்தனாலை அரசு நல்ல விலை கொடுத்து வாங்கினால் கரும்பின் விலை ஏறும், ஏன் அதனை செய்யவில்லை?)

நம் நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்தாலே போதும், நாம் வளர்ந்த நாடுகளில் மேலான ஒன்றாகி விடலாம்.

எளியவனாக இருந்தால் பயந்து பயந்துதான் இருக்கவேண்டி வரும், நாம் பலமாக இருந்தால் நம் சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும். எல்லாருக்கும் ஆமாம் சாமி போடுவதை நிறுத்திவிட்டு, தைரியமான முடிவுகளை எடுத்து நாட்டை வலிமை மிக்கதாக ஆக்க நாம் முன்வர வேண்டும்.

  • அடையாள எண் வழங்குதல் (இதில் ஏதோ முன்னேற்றம் தெரிகிறது, நந்தன் இருப்பதால் சொதப்பல் இருக்காது என நம்பலாம், பாராட்டுக்கள்.)
  • அரசை முற்றிலும் கணினி மயமாக்குதல்,
  • விவசாயிகளிடம் நேரடி தொடர்பு (மானியம், பயிர் காப்பீடு, புள்ளிவிவரம் சேகரிப்பு, ...) இவற்றை கணினி மயமாக்கப்பட்ட வங்கி கணக்குகள், தொலை பேசிஎண் மூலம், இணைத்து விவசாயிகளிடம் அரசு செல்லவேண்டும், அவர்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது.
  • சட்ட துறை சீர்திருத்தம்,
  • காவல் துறை சீர்திருத்தம்,
  • மக்கள் கேட்காமலேயே அனைத்து (RTI) தகவல்களையும் வெளியிடுதல்(RTI கொண்டுவந்த மன்மோஹனுக்கு ஒரு ஓ...!)
  • அரசு ஒப்பந்தங்களில் (Tenders) மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்துதல்,
என அரசு மக்களுக்கான இயந்திரம் என்பதை நடப்பில் காண்பிக்கவேண்டும்.

பிறகு பாருங்கள் நாம் செல்லும் பாதையை.