Thursday, September 24, 2009

கிராமத்தின் தேவைகள் . . .1

இப்போது விவசாயிகளின் தேவைகள் என்ன என சிந்தித்து பாப்போம்,
  1. விவசாயிகளிடம் தற்போதுள்ள நிலங்களை அபகரிக்க ஒருபோதும் அரசு எண்ணக்கூடாது.
  2. விவசாய வேலைகள் எளிமயக்கப் படவேண்டும்.
  3. மானியங்கள் நேரடியாக விவசாயிகளுக்கே கொடுக்கப்படவேண்டும்.
  4. விவசாய உற்பத்தியாளர்களே நேரடியாக விற்க வழி காண வேண்டும்.
  5. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு எனில் அது, உண்மையான கூட்டுறவு.
இது ஏற்கனவே உள்ளதுதானே என நீங்கள் எண்ணலாம்?

இப்போது உள்ளது கூட்டுறவே அல்ல !, அது கொள்ளை உறவு. மக்கள் பணத்தை கொள்ளையிட கட்சிகள் மக்களுடன் செய்யும் உறவு.

ஆடு, பால் பண்ணை, விவசாயம் செய்ய என எதாவது ஒன்றிற்கு கடன் கேட்டு கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பாருங்கள் உண்மை புரியும். செய்திகளில் அரசு தருவதாக சொல்லும் விவசாய மானியங்கள் ( மேலே சொன்னவற்றிற்குதான்) பல ஆயிரம் கோடி ரூபாய்கள்
எங்கே யாருக்கு சென்றது என ஒரு நேரடி சர்வே எடுத்தால் பல உண்மைகள் வெளிவரும். ஒரு சோறு : இருபதாயிரம் கடனில் பத்தாயிரம் மானியம். ஏட்டளவில் இருக்கும் நபர் பெற்றது சுமார் மூன்றாயிரம் மானியம் மட்டும் ( சும்மா கையெழுத்து போட்ட கிடைக்குதில்ல சும்மாவா). மீதி கூட்டு கொள்ளை. பேங்க், கூட்டுறவு, இன்னும் திறமையுள்ள பிற துறைகள் மற்றும் புரோக்கர்கள் .
கற்பனை விவசாயியின் பெயரில் யார் யார் கொள்ளை அடிக்கிறார்கள் என பாருங்கள். இந்த கூட்டுறவு எப்படி மக்களை முன்னேற்றும்?

எங்குமே கூட்டுறவு ஜெயிக்கவில்லையா? ஏன் இல்லை! அமுல் ஒரு சிறந்த முன்மாதிரி, இஸ்ரேல் நாடு மிகச் சிறந்த முன்மாதிரி. எப்போது கிடைக்கும் அந்த நேர்மையும், உழைப்பும் நம் கூட்டுறவு சங்கங்களிடம்?

உலகின் உண்மை ஒன்றே. வலியவன் பிழைப்பான்.
survival of the fittest.
அய்யோ! விவசாயம் சீரழிகிறதே, கிராமங்கள் பாழாகிறதே என கூச்சல் போடுவதால் விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் எந்த நன்மையும் வந்துவிடாது.
என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதில் நாம் ( விவசாயிகள் ) மிகவும் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும்.
  • விவசாயிகள் ஒன்றிணையவேண்டும், நாம் ஒவ்வொரு கிராமங்களிலும் பங்காளி சண்டையாலும், கட்சியாலும், ஜாதியாலும், மதத்தாலும் நமக்குள் ஒற்றுமையின்றி இருக்கிறோம். இதுவே நம் வீழ்ச்சிக்கு காரணம். பிற மதத்தினரை மதிக்கும் உயர் ஜாதி இந்துக்கள் தன் மதத்தில் தாழ்ந்தவர் என இவர்களே கட்டம் கட்டி மிதிக்கின்றனர். உரில் உள்ள கோவில்களில் அனுமதிப்பதில்லை, தனி டம்ளர் முறை இன்னும் உள்ளது. இவைகள் உடனடியாக களையப்பட வேண்டும். ஊரில் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தால்தான் நாம் அனைவரும் வளர முடியும். தவறுகளும் பிரச்சினைகளும் இல்லாமல் இரண்டு மனிதர்கள் ஒன்றாக வாழமுடியாது, எனில் கிராமங்கள் மட்டும் என்ன விதிவிலக்கு. ஆனால் அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் பல முரண்பாடுகள்.
    1. ஒவ்வொரு ஊரிலும் வாரம் ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து விவசாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.(மேலும் வளரும்)

Wednesday, September 23, 2009

எனது கிராமம், எனது ஆசைகள்...

எங்கள் ஊரின் கச்சேரி,
அது எப்போதும் நாளுபட்டே கிடக்கும்.

கிராம பஞ்சாயத்து தேர்தல் வந்தது ,
தலைமை ஆசிரியர் ஓய்வு இவர் சுயேட்சை ,
மணல் ஏஜென்ட் இவர் எதிர்க்கட்சி,
அப்பிராணி மணல் ஏஜென்ட் தம்பி இவர் ஆளும்கட்சியின் கையாள்.
போட்டி ஆரம்பம் ஆயிற்று. . .

சிலர் தலைவரின் அன்பு கட்டளைக்காக
பொட்டலத்து சோற்றை தின்று கம்பம் நாட்டி வீட்டை மறந்தனர்,

சிலர் தான் செய்யும் திருட்டை மறைக்க கப்பம் கட்டினர்,

சிலர் சரக்கில் நனைந்து, விலைமாந்தர்கள் ஆனார்கள்,
சிலர் கோயில் கட்ட நிதி திரட்டி கடவுளையும் சாட்சி ஆக்கினர்,
இன்னும் சிலர் மாறாத ஓட்டினால் செல்லாத காசானார்கள்,

இன்னும் சிலர் விடுமுறைக்கு திட்டம் இட்டனர்,

இன்னும் கொஞ்சம் பேர் மீதம் இருந்தனர்,
மாற்றம் விரும்பும் அவர்கள் மைனாரிட்டியால் தோற்று போனார்கள் ...

முடிவில் கையாள் செங்கோல் ஏந்தினார்...

அண்ணா அன்றே சொன்னார் மக்கள் எவ்வழியோ அரசும் அவ்வழியே என்று.
எப்போதும் அடிமை வாழ்வே நிம்மதி என்கிற ஊரில்
நேர்மையும் நீதியும் கொஞ்சம் சாய்ந்துதான் கிடக்கும்.

கணக்குகளில் மட்டும் வேலைகள் நடந்தன,
ஏரி, வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டன.
குடிநீருக்கு அடி குழாய்கள் அமைக்கப்பட்டன,
கான்கிரீட் பாதை, விளையாட்டு மைதானம், சுடுகாடு சுற்றுசுவர், என மொத்தம் 90 லட்சம் செலவு.

இதில் உண்மையாக உள்ளது பாதையும், விளையாட்டு மைதானமும் .
அதிலும் உண்மை பள்ளை இளித்தது.

சுமாராக ஒரு 50 லட்சம் பணம்
கருப்பு ஆயிற்று.

மழை வந்ததில் வாய்கால்கள் வழிவிடவில்லை,
ஏரி நிறையவில்லை,
அவைகளுக்கு என்ன தெரியும், பாவம் மக்கள்.

இதற்கு மைனாரிட்டி மக்கள் சோர்ந்துபோய்விடவில்லை ,
அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஊருக்கு தேவையான நல்ல காரியங்களை அவர்களாகவே செய்தனர்,
பிரதிபலனை எதிர்பார்கவில்லை,

தூர் எடுத்தனர், மரம் நட்டனர், குப்பைகளை ஒழுங்கு பன்னினர்.
துணிப்பையை கொடுத்து பிளாஸ்டிக் வேண்டாம் என்றனர்.
பிளாஸ்டிக் எரித்தால் கேடு என்றனர்.
இயற்கை வழி நம்வழி என்றனர்.

முதலில் கேலி செய்தவர்கள், பின்னர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்,
மக்கள் உண்மையை உணர்ந்தனர்.
நாமே நம்மை ஆள்வதன் சுகத்தை கண்டனர்,
மைனாரிட்டி, மெஜாரிட்டி ஆனார்கள்.
இயற்கை வழியே எங்கள் வழி, வேண்டாம் இந்த செயற்கை நாகரிகம்.

இப்போது,

நின்று செல்லும் பேருந்து, தளும்பி நிற்கும் எங்கள் ஏரி,
அன்னை பூமி மாதாவின் அன்பினில்,
அசுர பலம் கொண்ட எங்கள் அப்பன் கதிரவனின் காலடியில்,
வாழும் மானிடப் பெருங்கூட்டம் எங்களுடையது.

இயற்கையே எங்கள் மதம்,
உண்மையே எங்கள் வழி,
அன்பே எங்கள் மொழி,
அறிவே எங்கள் பலம்,
அதன் தேடலே எங்கள் பயணம்,
மகிழ்ச்சியே எங்கள் சுவாசம்,
உழைப்பே எங்கள் அடையாளம்.
இதுவே எங்கள் நெறி.

Wednesday, September 16, 2009

பசுமை விகடன் மற்றும் தமிழக விவசாயிகள்

நண்பர்களுக்கு வணக்கம்,

நான் பார்க்கிற விவசாய புத்தகத்தையெல்லாம் வாங்கி படிக்கிறவன்.அதில் பெரும்பாலும் விதை கம்பெனிகளின் விளம்பரம் ஒரு பக்கம், பிறகு அந்த விதையால் அதிக விளைச்சல் எடுத்த விவசாயியின் கட்டுரை ஒரு பக்கம் என்று பக்கா கமர்சியல் படம் போல இருக்கும். ஆனால் பசுமை விகடன் ஆரம்பத்தில் ஆனந்த விகடன் இதழில் வந்தபோதே அருமையாக இருந்தது. இப்போது தனி இதழாக விவசாயிகளின் உற்ற தோழனாக மிளிர்கிறது. இதைபோல்ஒரு தமிழ் விவசாய இதழை இதுவரை நான் கண்டதில்லை.இதற்கு அடுத்து எனக்கு பிடித்த புத்தகம் ஸ்பிக் வேளாண் செய்தி மலர். (பெயர் சரி என்றே எண்ணுகிறேன்).

இப்போதுள்ள அடிப்படை விவசாய முறைகள் மாறாமல் விவசாயிகள் விவசாயம் செய்து சமுதாயத்தில் முன்னேற முடியாது என்பது கண்கூடு.

இதுவரை நீங்கள் பசுமை விகடன் வாசிக்கவில்லைஎன்றால் வாழ்வின் ஒரு முக்கிய மற்றும் அடிப்படை தேவையான விவசாயம் பற்றிய ஒரு மாறுபட்ட, ஆச்சரியத்தக்க கண்ணோட்டத்தை நீங்கள் அறிந்துகொள்ளாமலே இருக்கிறீர்கள் என்பது உறுதி.

உழவர்களுக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் மிக எளிய முறையில் அழகிய படங்களுடன் இதில் விளக்கப்படுகின்றன.

உங்களுக்கு தெரியுமா!

விவசாயம் செய்ய ரசாயன உரம் தேவையில்லை, பூச்சிகொல்லி தேவையில்லை, வீரிய ஒட்டு விதைகள் தேவையில்லை, இன்னும் சொல்லப்போனால் நிலத்தை உழ வேண்டியதில்லை. இயற்கையோடு ஒன்றாக நாம் மாறும்போது அதுவே நம்மை காக்கிறது. என்னை பைத்தியம் என்றுதானே நினைக்கிறீர்கள்? அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கத்தான் வேண்டும்.

ஒரு நாட்டு மாட்டையும், 200 லிட்டர் பிளாஸ்டிக் பாத்திரத்தையும், ரோட்டில் கிடைக்கும் சாதரண இலை தலைகளையும் வைத்துக்கொண்டு பாலேக்கரும், நம்மாழ்வாரும், நடராஜனும் கலந்து அடிக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இத்தனை ஆண்டுகளாக(சுமார் 50) நம்மை ஆண்டு வந்த கம்பெனிக்காரங்களுக்கும் விவசாய துறை வல்லுனர்களுக்கும் சாட்டையடி.

பி.கு : எனக்கும் விகடன் இதழுக்கும் எந்தவித மறைமுக, நேர்முக தொடர்பும் இல்லை, ஒரு சந்தாதாரன் என்பதை தவிர.

Sunday, September 13, 2009

கள்ளும் அரசாங்கமும் ...



கள்ளு இறக்க அரசு தடை . ஏன்?



அது போதை தரும் என்பது காரணம் அல்ல ...
(ஒயின் ஷாப்பை அரசாங்கமே அல்லவா நடத்துகிறது).
ஒவ்வொரு பனை மரமும் கள்ளு உற்பத்தி செய்யும் பாக்டரி, கள்ளில் போதை மாத்திரை கலந்து விற்கிறார்கள், ஒவ்வொன்றையும் அரசு கண்காணிக்க இயலாது. ஆனால் இங்கிலீஷ் சரக்குகள் குறிப்பிட்ட சில பாக்டரியில் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. எனவே கண்காணிப்பதில் சிரமம் இல்லை. எனவே கள்ளு உற்பத்தியை அரசு தடை செய்கிறது.

இது அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட காரணம்.

இத்தனை சற்று உற்று நோக்குவோம்.

இங்கிலீஷ் சரக்கில் போதைக்காக மாத்திரை கலந்து விற்றால் அரசு இங்கிலீஷ் சரக்கை தடை செய்துவிடுமா? இது ஒரு நொண்டி சாக்கு...
போதை மாத்திரை கலந்து விற்கிறார்கள் என்றால் அரசு ஒவ்வொரு மரமாக சென்று ஆராய தேவை இல்லை, போதை மாத்திரை என்ன மரத்திலா விளைகிறது? மாத்திரையை தடை செய்தாலே போதும்..
இங்கு பிரச்சனை போதை மாத்திரை தானே தவிர கள்ளு அல்ல. போதை மாத்திரை ஏன் தடை செய்யப்படவில்லை ? தடை செய்யப்பட்டது என்றால் அது எப்படி சாதரண மக்களுக்கு கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட ஒன்று சாதரணமாக மக்களுக்கு கிடைத்தால் அந்த அரசு செயல் இழந்துவிட்டது என்றுதானே பொருள். ஒரு மாத்திரையை தடை செய்ய அதிகாரம் இல்லாத அந்த அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டது என்றுதானே பொருள் .இல்லை அப்படி இல்லை என்றால் , அந்த மாத்திரையை தண்ணீரிலும் பாலிலும் கலந்து குடித்தாலும் போதை வரும் தானே!! அப்போது மக்களை காக்க அரசு என்ன செய்தது? உண்மையில் அரசு போதை மாத்திரை என்று சொல்லி கள்ளு என்றால் விஷம்தான் கிடைக்கும் என்று பொய் செய்தியை பரப்பி மக்களை இங்கிலீஷ் மது பானத்தை மட்டுமே குடிக்க வைக்கிறது. அது உண்மையில் அதிக அளவு சாராயம் உள்ளது , மிகவும் உடல் நலத்திற்கு கேடானது ஆனால் மது ஆலை முதலாளிகளுக்கும் அரசை ஆள்வோருக்கும் மிகவும் விருப்பமானது. இதற்கு பலமான சாட்சி உண்டு.

கேரளம் கர்நாடக அரசுகள் கள்ளை தடை செய்யவில்லையே , ஏன் ?அங்கு போதை மாத்திரை இல்லையா? இல்லை போலி அரசியல்வாதிகள் இல்லையா?

மனிதனின் ஈரலை கெடுக்கும் அந்நிய மது பானத்தை அரசு தடை செய்யாது !,
மழை நீர் பூமியினுள் செல்வதை தடுத்து மனித குல பேராபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக்கை அரசு தடை செய்யாது! ,
ஓசோன் மண்டலத்தை காலி பண்ணும் பிரிட்ஜ் இல் உபயோகிக்கும் CFC என்கின்ற குளிர்விப்பனை அரசு தடை செய்யாது!,
ஏரி குளம் வாய்க்கால் போன்ற முக்கிய நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசு, இனாமாக கட்சி மக்கள் ஆக்கிரமிப்பை பட்டா போட்டுக்கொள்வதை தடை செய்யாது!,
சாயப்பட்டறையின் சுத்திகரிக்காத கழிவு நீரினால் பல கோடி மக்கள் கேன்சர் , தோல் நோய் இன்ன பிற புதிய புதிய நோய்களினால் மெல்ல மெல்ல சித்ரவதையை அனுபவித்து இறக்கிறார்களே , அதனால் என்ன சாயப்பட்டறைகளை அரசு தடை செய்யாது!, குறைந்தபட்சம் கழிவு நீரை சுத்தம் செய்து வெளியிடுங்கள் என்றுகூட கேட்டுக்கொள்ளாது!
( கழிவை கடலில் கொட்ட பெரும் முயற்சி எடுக்கிற அரசு , கழிவை சுத்தம் செய்ய முயற்சி எடுக்கவில்லை. எல்லாம் பண முதலாளிகள் படுத்தும் பாடு .காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கள்ளை இறக்க அனுமதிக்க கூடாது என உண்ணாவிரதம் இருந்ததை மறக்கமுடியுமா! ஆனால் அரசு சாராயம் விற்கலாம், அப்போது இவரது காந்தியஸம் எங்கே சென்று தூங்குகிறது?.)

இவ்வாறு மக்களை வஞ்சம் தீர்த்து கொல்லும் அரசு நீதிமன்றத்தில் ஏன் மக்கள் மீது பாசம் கொண்டு கள்ளை தடை செய்தது?

பணம். மதுபானம் உற்பத்தி செய்கிறவர்கள் அரசுக்கு உற்பத்தி வரி செலுத்துகிறார்கள் (அதனை ஆராந்து பார்த்தால் தான் தெரியம் உற்பத்தியில் எவ்வளவு கருப்பு எவ்வளவு வெள்ளை என்று), பிறகு மேற்படி அரசை ஆள்பவர்களுக்கு கப்பம் ( ஆண்ட கட்சிகள் எதிர் கட்சிகளாக மாறி குற்றம் சாட்டுவதனால் ஒரு நல்ல பலன் பல பொதுவான உண்மைகள் வெளி வருகின்றன, அதில் ஒன்று இது ) கட்டுகிறார்கள்.ஆனால் கள்ளை இறக்கும் விவசாயி எப்படி கப்பம் கட்ட முடியும் ? அதனால் தான் கள்ளை இறக்கி எனது கப்பத்தில் கன்னம் வைக்காதே என்று விவசாயிகளை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது .
மற்றொரு காரணம் அரசுக்கு வருமானம் வருகிறது அதில் அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் , கலர் டிவி கொடுக்கிறார்கள் , அது இது என்று கேட்கவே புல்லரிக்கிறது. மக்களுக்கு தேவை இலவசங்கள் அல்ல! பாதுகாப்பு,
ஆம் சுதந்திரமாக நேர்மையாக சமுதாயத்தில் செயல்பட சட்ட விரோத , சமூக விரோத சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு( இது ஆளும் அரசியல் கட்சி மக்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்கிறது. காவல் துறை எப்போது தன்னாட்சி பெற்ற அமைப்பாக வருகிறதோ அப்போது ஒருவேளை இது அனைவருக்கும் கிடைக்கலாம் ), வேலைவாய்ப்பை உண்டாக்கும் நேர்மையான வெளிப்படையான அரசு மற்றும் அதன் எளிமையான நடைமுறைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம், இவை இருக்க வேலை வாய்ப்பு எளிதில் உண்டாகும்.

இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி திசை திருப்பி விட்டு , நாட்டை கொள்ளை அடிக்கும் அரசு அல்ல. நேர்மையாக, மக்களையும் நாட்டையும் பாதுகாக்கும் அரசு.

எனவே அரசு விவசாய மக்களின் வாழ்க்கை மேம்பட, அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்க , மக்களுக்கு மலிவான ஒரு மது பானம் கிடைக்க,
மக்களின் ஆரோகியம் மேம்பட , அரசு மனம் மாறி ,
விரைவில் கள்ளு இறக்க அனுமதிக்கும் என நம்புவோமாக . . .(வேறு என்ன செய்ய முடியம்?)